ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விவசாய தேவைக்காக, 6,972 டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது;ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு ஜன., 1 முதல், 30 வரை, 12.74 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பாண்டின் சாகுபடி தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 27 டன், சிறு தானியங்கள், 12.2 டன், பயறு வகைகள், 13 டன், எண்ணெய் வித்துக்கள், 18 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.அதுபோல ரசாயன உரங்களான யூரியா, 6,972 டன், டி.ஏ.பி., 1,746 டன், பொட்டாஷ், 5,382 டன், காம்ப்ளக்ஸ், 13,074 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடுபொருட்கள், உரங்கள் இருப்பில் உள்ளன. 2023-24ம் ஆண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வான, 42 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்கள் கண்டறியபப்பட்டு, அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதியில், நெல் அறுவடை நடந்து வருவதால், 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 900 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் வரத்துக்கு ஏற்ப, கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.