| ADDED : ஆக 11, 2011 11:52 PM
ஈரோடு: மாநகராட்சி தீர்மானத்தில் இல்லாத இனங்களுக்கும், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாநகராட்சி மையத்தில் அமைந்துள்ள நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறி கொண்டு வரப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இருந்து, விவசாயிகளும் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து சிறு வியாபாரிகள் வாங்கி சென்று நகரங்களில் தள்ளு வண்டி மூலம் விற்பனை செய்கின்றனர்.தள்ளு வண்டிக்கு இரண்டு ரூபாய் மட்டுமே வசூல் செய்ய அனுமதி உள்ளது. ஆனால், தள்ளுவண்டிகளுக்கு ஆறு ரூபாய் வரை, ஒப்பந்ததாரர் கட்டாய வசூல் செய்கிறார்.
மார்க்கெட் பின்புறம் உள்ள கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நிறுத்தும் கார்களுக்கு 20 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதற்காக, தினசரி 500 ரூபாய் கொடுக்க தனியாருக்கு குத்தகை விட்டுள்ளனர். அதேபோல், தினசரி மார்க்கெட், மலர் சில்க்ஸ் அருகில் இரண்டு சைக்கிள் ஸ்டேண்டு போட்டு வாகனங்களுக்கு வசூல் செய்யப்படுகிறது. இதற்காக தினசரி தலா 500 ரூபாய் கொடுக்கப்படுகிறது. மணிக்கூண்டில் இருந்து காமராஜ் உயர்நிலை பள்ளி வரை ரோட்டில் உள்ள சிறு வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்யக்கூடாது. ஆனால், தினசரி 3,000 ரூபாய் தனியாக குத்தகை விட்டுள்ளனர். இதுபோல், மாநகராட்சி கெஜட்டில் இல்லாத இனங்களுக்கு தினசரி 5,000 ரூபாய்க்கு குறையாமல் வசூல் செய்கின்றனர். இதனால், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இது குறித்து பல முறை மாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர் என, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.