உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணையின் மாதிரி வடிவம் சீராகுமா?

பவானிசாகர் அணையின் மாதிரி வடிவம் சீராகுமா?

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, அணையின் மாதிரி வடிவம் பராமரிப்பின்றி குப்பையாக கிடக்கிறது.'நதி மூலம், ரிஷி மூலம் காண முடியாது' என்பர். ஆனால், பவானிசாகர் அணை பூங்காவுக்கு சென்றால், பவானி நதியின் பிறப்பிடத்தை காணலாம்.பவானிசாகர் அணை 1952ல் கட்டி முடித்த போது, அணையுடன் நீர் மின் நிலையமும், அதன் அருகில் அழகிய பூங்காவும் கட்டப்பட்டன. பூங்காவுக்குள் பல்வேறு அழகிய பூஞ்செடிகள், மரங்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் செயற்கை நீரூற்று, செயற்கை அருவி, படகு சவாரி செய்ய வசதி, குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றிருந்தன.பூங்காவில் உள்ள தேசிய சின்னம் அருகில், 15க்கு பத்து அடி பரப்பளவுள்ள அறையில், பவானியாறு உற்பத்தியாகும் மலைப்பகுதிகளை அப்படியே பிரதிபலிக்கும் மாதிரி வடிவம் கட்டப்பட்டுள்ளது.நீலகிரி மலைப்பகுதியில் உள்ள தொட்டபெட்டா உள்ளிட்ட மலை சிகரங்கள், பவானியாறு உற்பத்தியாகும் இடம், பல காட்டாறுகள் இணைந்து பவானியாறுடன் இணைந்து; அது ஓடிவரும் பாதை, வழியிலுள்ள குந்தா, பில்லூர் உள்ளிட்ட அணைக்கட்டுகள் ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன. இதன் மற்றொருபுறம், தலமலை காப்புகாடுகளில் இருந்து மோயாறு தோன்றும் விதம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மோயாறும், பவானியாறும் சங்கமிக்கும் இடத்தில், பவானிசாகர் அணை அமைந்துள்ள விதத்தை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக, இந்த அமைப்பு இடம் பெற்றிருந்தது.அணை மாதிரி அமைப்பு அமைந்துள்ள அறையின் கூரையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் இருந்து, மழை போல் தண்ணீர் பொழியும் வசதியும் இருந்தது. இவ்வாறு பொழியும் தண்ணீர், மலை போன்ற அமைப்புகள் வழியாக, ஆறுகள் போல் ஓடி வருவதைப் பார்க்க மிகவும் அருமையாக இருக்கும். அணைப் பூங்காவுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு, இக்காட்சி மிகச்சிறந்த பூகோள பாடமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், இந்த அணை மாதிரியை முறையாக பராமரிக்காமல், கைவிட்டு விட்டது பொதுப்பணித்துறை. மரங்களிலிருந்து விழுந்த இலை சருகுகளும், குப்பையும் குவிந்துள்ள இந்த அறையில், என்ன இருக்கிறது என்பதே பலருக்கு தெரியாது. இதனால், பூங்காவுக்கு வரும் பலரும் இப்பகுதிக்கு வருவதுமில்லை.சமீபத்தில் அணைக்கு வந்த, பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம், இங்கு வந்தார். அணை மாதிரியை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ