| ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
ஈரோடு : ''தவறு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் தெரிவித்தார்.ஈரோட்டில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் வரலாற்றில், இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்ததில்லை. தேர்தல் ஆணையர், 3 பேரும் பிரதமர் மோடியின் எடுபிடிகளாக மாறிவிட்டனர். இன்று கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல் நாளில் எந்த வகை பிரசாரமும் கூடாது என்பது சட்டம். இதை மதிக்காமல், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய துவங்கி உள்ளார். இதை அனைத்து 'டிவி', பத்திரிகைகள் வெளியிடுகின்றன. தேர்தலுக்கு முன், 48 மணி நேரம் மக்கள் சிந்தித்து ஓட்டுப்போடுவதற்காகத்தான், பிரசாரத்தை தடை செய்கின்றனர்.'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகளில், தவறு செய்தவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர்.ஜெயலலிதா இந்துத்துவா கொள்கை கொண்டவர் என அண்ணாமலை கூறுவது முரண்பாடானது. ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வெண்டில்தான் நானும் படித்தேன். அங்கு சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தது எனக்கு தெரியும். முஸ்லிம்களின் இப்தார் நோன்பில் ஜெயலலிதாவுடன், நான், மூப்பனார், நல்லகண்ணு பங்கேற்றோம். அரசியல் வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.