| ADDED : ஆக 07, 2024 06:52 AM
பவானி: பவானியை அடுத்த ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் ஐயப்பன், 52; அதே பகுதியில் உள்ள பேபி லட்சுமி என்பவருக்கு சொந்தமான கடையில் டெய்லராக பணிபுரிகிறார். அவருக்கு சொந்தமாக அதே பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கிறார்.பேபி லட்சுமியிடம் தற்காலிக டிரைவராக பணிபுரிபவர் செந்தில்குமார், 20; இவர் அதே பகுதியை சேர்ந்தவர். கட்டட தொழிலாளி அபிமன்யு, 20; 16 வயது சிறுவன் ஆகியோர், பேபி லட்சுமி வீட்டில் பணம், நகையை திருட திட்டமிட்டனர். இதற்காக மூவரும் பேபி லட்சுமி வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை நள்ளிரவில் துண்டித்தனர். பிறகு காலிங் பெல் அடித்தனர். மின்சாரம் இல்லாததால் சத்தம் எழாததால் அவர் வெளியே வரவில்லை. அதன் பிறகே மின்சாரம் இல்லாவிடில், சத்தம் வராது என்பதை மூவரும் உணர்ந்தனர். இதனால் பேபி லட்சுமி அணிந்துள்ள நகையையாவது பறித்து செல்லலாம் என்று யோசித்து, அவரது மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட செந்தில்குமார், ஐயப்பனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டனர் என கூறியுள்ளார். இதனால் பயந்து போன அவர், வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த மூவரும் ஏமாற்றமடைந்தனர். மொபைல்போனில் பொய் சொன்னதால் சிக்கி கொள்வோம் என பயந்த மூவரும், ஐயப்பனை கத்தியால் குத்தி விட்டு, மர்ம நபர்கள் மீது பழியை போட முடிவெடுத்தனர். ஐயப்பன் வசிக்கும் வீட்டுக்கு மூவரும் சென்று, கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர் தண்ணீர் கொண்டு வந்தபோது, மற்ற இருவரும் பிடித்துக்கொள்ள, ஐயப்பன் வயிற்றில் கத்தியால் செந்தில்குமார் குத்தினார். வலி தாளாமல் ஐயப்பன் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் துரத்தியதில் சிறுவன் சிக்க, மற்ற இருவரும் தப்பினர். சித்தோடு போலீசார் சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில் செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர். இருவரையும் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான அபிமன்யூவை போலீசார் தேடி வருகின்றனர்.