நாற்றத்தில் நகைக்கடை வீதி
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு பொன்வீதியில், தங்கம், வெள்ளி நகை விற்பனை கடைகள் அதிகம் செயல்படுகின்றன. இப்பகுதியில் பாதாள சாக்கடை மேன்ஹோல் சாலை நடுவில் உள்ளது. மேன்ஹோல் வழியாக கழிவுநீர் கசிந்து சாலையில் குட்டை போல் தேங்குகிறது. மாநகரின் முக்கிய வீதிகளில் ஒன்றாக பொன்வீதி உள்ளதால், துர்நாற்றம் கிளம்பி கடைக்காரர்களை மட்டுமின்றி வாடிக்கையாளர்களையும் முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள், கழிவுநீரை வாரி இறைத்தபடி செல்வதால், நடந்து செல்வோர் மீது படுகிறது. குட்டை குளமாக மாறும் முன், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.