| ADDED : நவ 28, 2025 12:50 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் ரயில் நகரை சேர்ந்தவர் முத்துகுமார், 63; இவரது மனைவி பூங்கோதை. திருமணமான இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 24ல் மகளை பார்க்க இருவரும் வெளியூர் சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த, 7 பவுன் நகை, வெள்ளி பொருள், 15,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. அவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் சந்திரன் பார்கவி வீட்டில், ஒரு பவுன் நகை திருட்டு போயுள்ளது.புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' பதிவுகளை பார்த்தபோது, கடந்த, 25ம் தேதி நள்ளிரவில் முகமூடி அணிந்த நான்கு ஆசாமிகள், இரும்பு கம்பி, ஆயுதங்களுடன் வீடுகளை எட்டிப்பார்ப்பதும், குரைத்த நாய்களை அடித்து விரட்டியும், சில வீடுகளின் சுற்றுச்சுவரை ஏறி உள்ளே குதித்து, ஆள் இருந்த வீடுகளை விட்டுவிட்டு செல்வதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.