| ADDED : மார் 02, 2024 03:36 AM
ப.வேலுார்: பரமத்தி டவுன் பஞ்.,க்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுத்தவர்கள், அதை உள் வாடகைக்கு விட்டு, 'கல்லா' கட்டி வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பரமத்தி டவுன் பஞ்.,க்கு சொந்தமான, 19 கடைகள் கடந்த மாதம் ஏலம் விடப்பட்டன. பரமத்தி - திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள கடைகளை தங்கள் பெயரிலும், நிறுவனம் பெயரிலும் ஏலம் எடுத்த பலர் கடை வைக்கவில்லை. அதற்கு பதில் கடையை வாடகைக்கு விட்டுள்ளனர். வாடகைக்கு இருப்போர் கடையில் ஒரு பகுதியை உள் வாடகைக்கும் விட்டுள்ளனர். இதற்காக, பல மடங்கு தொகையை வசூலித்து, 'கல்லா' கட்டி வருகின்றனர். இதனால், பரமத்தி டவுன் பஞ்சாயத்தில், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஏலம் எடுத்தவர் யார், அவர் தான் கடை வைத்துள்ளாரா, ஆவணங்கள் சரியாக இருக்கின்றதா என அவ்வப்போது கள ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை, மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பரமத்தி டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, ''ஏலம் எடுத்தவர்கள் உள்வாடகைக்கு விடப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. களப்பணி ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.