| ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில், நிர்வாகிகள் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குனரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கைத்தறி, துணி நுால் துறை சார்பில், 228 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம், 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் சார்பில், தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தி மூலம் பல நெசவாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஜவுளி துறையில் நுால் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக பல்லாயிரம் தறிகள் வேலையில்லாமல் நெசவாளர்களும், குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். 10 ஆண்டுகளாக, ஜூன் முதல் வாரத்தில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி துவக்கப்பட்டு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.இந்தாண்டும், ஜூனில் வேட்டி, சேலை உற்பத்தியை துவக்கினால் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு ஏதுவாக அமையும். மேலும், பொங்கலுக்கு வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதோடு, பல லட்சம் நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மனுவின் நகல் தமிழக முதல்வர், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர், தலைமை செயலாளர், கைத்தறி மற்றும் துணி நுால் துறை முதன்மை செயலாளர், கைத்தறி துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.