| ADDED : மே 29, 2024 07:17 AM
அந்தியூர் : அந்தியூரை அடுத்த பருவாச்சி, காந்திநகர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி, 38; இவரின் மனைவி பரிமளா, 32; தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியில் அரசு புறம்போக்குநிலத்தில், குடிசை வீடு கட்டி, ௧௦ ஆண்டுகளாக வசித்தனர். இந்நிலையில் குடிசை வீட்டை, பவானி வருவாய்த்துறையினர், அந்தியூர் போலீசார் பாதுகாப்புடன் நேற்று அகற்ற வந்தனர். பழனிசாமி குடும்பத்தினரே தாங்களாக முன்வந்து குடிசையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது: அரசு புறம்போக்குநிலத்தில் குடிசை கட்டி, ௧௦ ஆண்டுகளாக வசித்தனர். சில மாதங்களாக குடும்பத்தில் அடிக்கடி நிகழ்ந்த சண்டையால், காலனியை சேர்ந்த மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் எச்சரித்தும் சண்டை தொடரவே, பவானி வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்து புகார் தந்தனர். குடிசை வீட்டை அகற்ற வலியுறுத்தினர். இதனால் ஏழு நாட்களுக்க முன் நோட்டீஸ் தரப்பட்ட நிலையில், குடிசையை அகற்ற வந்தோம். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து பழனிசாமி கூறியதாவது: ஜம்பை, பெருமாபாளையம் புதுாரை சேர்ந்த நான், பத்து ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் இங்கு வந்தேன். மாமியார் வீட்டருகில் புறம்போக்குநிலத்தில் குடிசை கட்டி, மனைவி, வயதுக்கு வந்த இரண்டு மகள்கள், மகனுடன் வசித்தேன்.கட்டட வேலைக்கு சென்று வருகிறேன். ஆனால், எங்களை உள்ளூரை சேர்ந்தவர்கள், குடிசை கட்டி வசிக்க எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். தற்போது அதிகாரிகள் மூலம் குடிசையை அகற்றி விட்டனர். வீடில்லாத நிலையில் மகள்களுடன் எங்கே செல்வது என்று தெரியவில்லை.இவ்வாறு கூறினார்.