ஈரோடு : அரசு வேலை வாங்கி தருவதாக நான்கு பேரிடம், 20.09 லட்சம் ரூபாய் மோசடி செய்த இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மார்ட்டீன், 37. கடந்த 2019ல், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரிலிகேர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில், விற்பனை மேலாளராக பணியாற்றினார். அப்போது, அதே நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றிய கோவை கே.ஜி கார்டனை சேர்ந்த பார்த்திபனுடன், 38, இவருக்கு நட்பு ஏற்பட்டது. கடந்த 2021 மே மாதம் ராஜேஷ் மார்ட்டீன் வீட்டுக்கு பார்த்திபன் வந்துள்ளார். அப்போது நெருங்கிய உறவினர், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளேன் என, சில ஆவணங்களை ராஜேஷ் மார்ட்டீனிடம் பார்த்திபன் காண்பித்துள்ளார். இதை நம்பிய ராஜேஷ் மார்ட்டீன், 2021 மே 19, முதல், ஜூன் 28 வரை நான்கு தவணைகளாக, ஐந்து லட்சம் ரூபாயை பார்த்திபனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.ராஜேஷ் மார்ட்டீன் அவரது நண்பரான ஈரோட்டை சேர்ந்த ரஞ்சித்குமார், அவரது உறவினர் நாகராஜ், தாமரை ஆகியோருக்கு பார்த்திபனை அறிமுகம் செய்துள்ளார். ரஞ்சித்குமாருக்கு ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், நில அளவையர் பணி வாங்கி தருவதாகவும், நாகராஜூக்கு கோவை சிங்காநல்லுார் மாநகராட்சி அலுவலகத்தில் நில அளவையர் பணியும், தாமரைக்கு ஈரோட்டிலுள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் உதவி மேலாளர் பணி வாங்கி தருவதாகவும் உறுதி அளித்து, ராஜேஷ் மார்ட்டீன் மூலமாக பார்த்திபன் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக, 20 லட்சத்து, 9,999 ரூபாய் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பார்த்திபன், அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்பவும் கொடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் மார்ட்டின் கடந்த, 6ல் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பார்த்திபன் இதுபோல பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவர் வேறொரு வழக்கில் கோவையில் கைதாகி மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. பார்த்திபன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பார்த்திபனிடம், கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அவரிடமும், சிறைத்துறை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.பார்த்திபனை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.