| ADDED : மே 28, 2024 07:17 AM
சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவிலின் உப கோவில்களுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ், சென்னிமலை அருகேயுள்ள பிடாரியூர் திருமுக மலர்ந்தநாதர் கோவிலுக்கு சொந்தமான, 36.84 ஏக்கர் நிலம் பல தலைமுறைகளாக, 25 பேரின் ஆக்கிரமிப்பிலும், பிடாரியூர் திருக்கண் நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 4.82 ஏக்கர் நிலம் தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பிலும் இருந்தது. கோவை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவுப்படி அளவீடு செய்து, இந்த நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டது.ஆக்கிரமிப்பு செய்த, 11 பேர், நிலம் எங்களுக்கே சொந்தம் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நடந்த சட்டப்பிரிவு-78-ன் கீழான வழக்குகள், ஈரோடு இணை ஆணையர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.மேல் முறையீடு செய்த, 11 பேரையும் வரும், 30-ம் தேதி காலை, ஈரோடு இணை ஆணையர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள ஆதாரங்களை கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் கைவசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.---