கோபி : நான் முதல்வன்-கல்லுாரி கனவு-2024 நிகழ்ச்சி, கோபி கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து பேசியதாவது:பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. உயர் கல்வியில் எதை படிப்பது என்று, இங்குள்ள நிபுணர்கள் ஆலோசனை வழங்குவர். இந்த விஷயத்தில் சொந்தக்காரர்களை விட இதுபோன்ற நிபுணர்கள் கூறுவதை கேட்டால், வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறலாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், எதிர்கால கல்வி குறித்து குழந்தைகளை குழப்ப வேண்டாம். இன்றைய காலத்தில் எல்லா துறைகளிலும், நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. அதேசமயம் படிப்புடன் தனித்திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.'பள்ளி புத்தகங்களை பத்திரப்படுத்துங்கள்' நிகழ்ச்சியில் போட்டித் தேர்வுகள் ஏன் நடத்தப்படுகின்றன? என்ற தலைப்பில், சென்னை, நந்தனம், அரசு கலை அறிவியல் கல்லுாரி தலைமை விரிவுரையாளர் அன்பு ஆறுமுகம் பேசியதாவது:இந்திய ரயில்வே துறையில், லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இதுபோன்ற தேர்வுகளை போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வாக கூட எடுத்து கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி., மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளின் கால அட்டவணையை, டவுன்லோடு செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு புத்தகம் தான், போட்டித்தேர்வுக்கு அடிப்படையான பாட புத்தகம். எனவே பள்ளி புத்தகங்களை கழித்து ஒதுக்காமல், பத்திரமாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அவைதான் போட்டித்தேர்வுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், சி.இ.ஓ., சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.