| ADDED : ஜூலை 09, 2024 03:40 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூவரின் காவல் 18ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்த வழக்கில், கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்ளிட்ட 21 பேரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 11 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் கைதான தெய்வீகன், அரிமுத்து, அய்யாசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையொட்டி சி.பி.சி.ஐ.டி., போலீசார், தெய்வீகன் உள்ளிட்ட மூவரையும் நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், மூவரின் நீதிமன்ற காவலை வரும் 18ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும் ஒருவர் கைது
கள்ளச்சாராய வழக்கில் கைதாகியுள்ள சேஷசமுத்திரம் சின்னதுரையிடம் அதே பகுதியை சேர்ந்த வேலு,43; சாராய பாக்கெட்டுகளை வாங்கி வெளி பகுதியில் விற்றது தெரிய வந்தது. அதனையொட்டி, சேஷசமுத்திரம் வேலுவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், இவ்வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.