ரிஷிவந்தியம்: மையனுார் புனித மைக்கேல் ஆர்.சி., அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.வாணாபுரம் அடுத்த மையனுார் புனித மைக்கேல் ஆர்.சி., அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் பேசியதாவது:கிராமப்புறங்களில் பெரும்பாலான தாய், தந்தையினர் வேலைக்கு செல்வதால், காலையில் உணவு தயார் செய்ய சிரமமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தினார்.இத்திட்டம் மூலம், மாவட்டத்தில் 667 பள்ளிகளில் பயிலும் 47,303 மாணவ, மாணவிகள் பயனடைந்த வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டதால், மாவட்டத்தில் 73 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6,427 மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவர்.அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான் தற்போது கலெக்டராகி உள்ளேன். கல்வி என்பது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் உள்ள புரிதல், மாணவர்கள் நன்றாக படித்து, எதிர்காலத்தில் நல்ல வேலையை பெற வேண்டும். கல்வி மட்டும் தான் முன்னேற்றம் அளிக்கும். தன்னலமற்ற ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதலை பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.ரிஷிவந்தியம் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், சி.இ.ஓ., முருகன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் முருகேசன், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், சந்திரசேகரன்.ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், வட்டார கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் உஷாஜோதிநாதன், ஊராட்சி தலைவர் ரமேஷ், பள்ளி தாளாளர் அந்தோணிராஜ், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.