| ADDED : ஆக 18, 2024 04:36 AM
கள்ளக்குறிச்சி : உடல் தானம் செய்வதில் சமுதாயத்தில் உள்ள தவறான புரிதல், எதிர்மறை எண்ணங்களை போக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடல் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கான பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, உடல் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து கவுரவித்தார். அரசு மருத்துவ கல்லுாரி டீன் நேரு முன்னிலை வகித்தார்.விழாவில் கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது:முழு உடல் தானம் என்பது மரணத்திற்குபின் மருத்துவ மாணவர்கள் கல்வி கற்பதற்கு உடலை தானம் செய்வதாகும். உடல் தானம் செய்தல் குறித்து சமுதாயத்தில் தவறான புரிதல் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. இதனை போக்க பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மட்டுமின்றி அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பிரிவுகளில் உயர்தர சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவத்துறை வளர்ச்சிக்கும், சிறந்த மருத்துவர்கள் உருவாக்கத்திற்கும் உடல்தானம் இன்றியமையாததாகும். எனவே, இறந்த பின் முழு உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.விழாவில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பழமலை, உடற்கூறியல் துறை இணை பேராசிரியர் எலிசபெத் பிரியதர்ஷினி, நிலைய உள்ளிருப்பு மருத்துவர் பொற்செல்வி, இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் மகுடமுடி, கல்லுாரி துணை முதல்வர் (பொ) சுகிர்தா, நிர்வாக அலுவலர் ஹரி மற்றும் உடல் தானம் வழங்கியோர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.