| ADDED : மே 14, 2024 04:56 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன்,75; விவசாயி. இவரது மனைவி லட்சுமி,65; இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை லட்சுமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அன்று மாலை 6:00 மணிக்கு இறந்தார். அதனையொட்டி அவரது உடல் இரவு 8:00 மணிக்க வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.அவரது உடல் நேற்று அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மனைவி இறந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த சுப்புராமன் காலை 8:00 மணியளவில், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து இறந்தார்.அதனையொட்டி இருவரின் உடலும் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.