| ADDED : ஏப் 15, 2024 03:41 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே உள்ள கிராமத்தில் ஒரு தெருவில் சிலர் விழுப்புரம் தொகுதிக்கும், மீதம் உள்ளவர்கள் கள்ளக்குறிச்சி தொகுதிக்கும் ஓட்டளிக்கும் நிலை உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, இதனுடன் திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நிர்வாக சிக்கல்கள் நீடித்து வருகிறது.இதன் உட்சபட்சமாக கிராமத்தில் ஒரு தெருவில் உள்ள சில வீடுகள் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியிலும், பிற வீடுகள் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியிலும் உள்ளன. திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமத்தில் 1,554 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முருகர் கோவில் தெருவில் 124 பேர் ரிஷிவந்தியம் தொகுதியிலும், மற்றவர்கள் திருக்கோவிலுார் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால், இந்த கிராமத்திற்கு ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகளே யாரிடம் ஓட்டு கேட்பது என தெரியாமல் குழம்பி விடுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே குடும்பத்தில் கணவன் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கும், மனைவி விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கும் ஓட்டு போடும் வகையில் ஐந்து குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளன.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் 124 பேர் பக்கத்தில் உள்ள வீரட்டகரம் கிராமத்திற்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். மற்றவர்கள் விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் வருவதால் அதே கிராமத்தில் ஓட்டளிக்கின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் சரியான தீர்வு காண வேண்டும்.