| ADDED : டிச 01, 2025 05:22 AM
கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து எஸ்.பி., தலைமையில் 300 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 21ம் தேதி தொடங்கி, தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. வரும் டிச., 3ம் தேதி மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏற்றப்படும் தீபத்தை கண்டு, அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதேபோல், கோவிலை சுற்றி 14 கி.மீ., தொலைவிற்கு கிரிவலம் செல்வர். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்துதல் உட்பட பல்வேறு பணிக்காக அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து எஸ்.பி., மாதவன் தலைமையில், ஒரு ஏடி.எஸ்.பி., மேற்பார்வையில், 2 டி.எஸ்.பி.,க்கள் 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 300 போலீசார் திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.