| ADDED : ஜன 08, 2024 06:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களிடமிருந்து மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு: தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மாநில அளவில் தலா 3 சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும். முதல் பரிசு 10 லட்சம் ரூபாய், 2வது பரிசு 5 லட்சம், 3வது பரிசு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் பள்ளிகள், கல்லுாரி மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மஞ்சள் பை விருதினை வழங்க உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்விருதுக்கான விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலக இணையதளமான https://kallakurichi.nic.inபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம். (தாலுகா அலுவலகம் பின்புறம்) விழுப்புரம் என்ற முகவரியில் வரும் மே 1ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.