| ADDED : நவ 26, 2025 07:48 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துாய்மைப் பணியாளர்கள் நலவாரியம் சார்பில் விபத்து மரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு துாய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து துாய்மைப் பணியாளர்களுக்கு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, மகப்பேறு கால உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, பணியின்போது விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால் நிவாரணம், ஈமச்சடங்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நல வாரியத்தில் பதிவு செய்து விபத்தில் மரணமடைந்த பாஞ்சாலை என்பவரின் வாரிசுதாரரான கணவர் முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்கு தாட்கோ மூலம் விபத்து மரண உதவித் தொகை ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், நல வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தாட்கோ மேலாளர் எழுமலை உடனிருந்தார்.