மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியும், அதற்கு அடுத்தபடியாக 15 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடியும், 10 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி சாகுபடி நடக்கிறது. சங்கரபுரம் வட்டத்தில் அரசம்பட்டு, பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, நெடுமானுார், குளத்துார், லக்கிநாயக்கன்பட்டி, மூலக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் மரவள்ளி சாகுபடி நடக்கிறது. இதில் முள்ளுவாடி, குங்குமரோஸ், வெள்ளை தாய்லாந்து, கருப்பு தாய்லாந்து போன்ற வகை மரவள்ளியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். 9 மாத பயிரான மரவள்ளி நன்கு வளர்ந்தவுடன் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 டன் மகசூல் கிடைக்கிறது. அறுவடை சமயங்களில் சேலம், ஆத்துார், தலைவாசல் ஆகிய பகுதியில் உள்ள சேகோ தொழிற்சாலை நிர்வாகம் விவசாய நிலத்திற்கு நேரிடையாக வந்து 75 கிலோ கொண்ட மூட்டைகளை ரூ.400க்கு வாங்கி செல்கின்றனர். அறுவடை செய்த நாளிலே அலைச்சல் இன்றி விவசாயிகளுக்கு அறுவடைக்கான பணம் கிடைப்பதால் சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.