உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கென அனுமதி பெற்று விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருப்பதற்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் அணைகள், ஏரி, குளங்கள், குட்டைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்ததோடு, விவசாயிகள் முப்போகம் பயிரிட்டு வந்தனர்.ஆனால், காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களர்களால் ஏரி, குளங்கள், குட்டைகள் பல இருந்த இடம் தெரியாமல் போனது. மேலும், பருவகால மழை பொய்த்ததோடு, குடிநீர் பிரச்னை ஏற்பட்டு, விவசாய பயன்பாட்டிற்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் உளுந்துார்பேட்டை பகுதியில் 108 ஏரி, குளங்கள் இருந்தன. ஆனால் தற்போது மிகவும் சொற்ப அளவிலான ஏரி, குளங்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக உளுந்துார்பேட்டை பகுதியில் கோடை காலங்களில் குடிநீர் பஞ்சம் தலைவரித்தாடுவதோடு, நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை, 5 நாட்களுக்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், உளுந்துார்பேட்டை பகுதியில் உள்ள ஏரி, குளங்களை துார்வாரி ஆழப்படுத்துவதற்காக விவசாயிகள் தங்களது பயன்பாட்டிற்காக மண் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏரி, குளங்களில் அனுமதி பெற்று மண் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதில் ஒரு சிலர் விவசாயத்திற்கு என அனுமதி பெற்று விவசாயம் அல்லாத பணிகளுக்கு விதிமுறை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுத்து ஒரு லாரி மண் 6,000 ரூபாய் முதல் விற்று வருகின்றனர். விவசாய பயன்பாட்டிற்கு அல்லாத மண் கடத்தலை போலீசாரும், வருவாய்த் துறையினரும் கண்டு கொள்வதில்லை. பொதுமக்களும் தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஏரி மண் எடுக்க அனுமதித்தது மண் கொள்ளையர்களின் கொள்ளை லாபத்திற்காக மட்டுமே பயன்படுகிறது. எனவே, அதிகரித்து வரும் மண் கொள்ளையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் விற்பனைக்காக ஏரி மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.