| ADDED : டிச 06, 2025 06:06 AM
கள்ளக்குறிச்சி: தமிழக அளவில் சிறந்த கூட்டுறவு கடன் சங்கம் என விருது பெற்ற ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களை, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் பாராட்டினார். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு அதிகளவு கடனுதவி வழங்குதல், வசூல் செய்யப்பட்ட சதவீதம், சங்க வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவடிக்கை உட்பட பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், சிறந்த முறையில் செயல்பட்ட 4 கூட்டுறவு சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ஒரு கூட்டுறவு சங்கம் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, நபார்டு வங்கி சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்ட ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் விருது வழங்கி பாராட்டினார். அப்போது, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் சத்யபிரதா சாஹூ மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் உடனிருந்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், விருது பெற்ற ஆலத்துார் தொடக்க வேளாண்மை சங்க செயலாளர் மாணிக்கம் மற்றும் சங்க பணியாளர்கள், அலுவலர்களை பாராட்டினார். அப்போது, சங்க செயலாட்சியர் சவிதாராஜ், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சசிகலா, சங்க செயலாளர்கள் செந்தில்முருகன், வரதராஜன், தங்கராசு, சங்க பணியாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.