கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரத்தின் மையத்தில் உள்ள பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலையமாகமாற்றிவிட்டு, புறநகர் பஸ் நிலையம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்குதீர்வு ஏற்படும்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பின் அருகே பஸ் நிலையம் உள்ளது.இதனை உள்ளூர் பஸ்களுக்கான டவுன் பஸ் ஸ்டேண்டாக மாற்றிடவும், வெளியூர் செல்லும் பஸ்கள் பயன்பாட்டிற்காக ஊருக்கு வெளியே புறநகரில் புதிய பஸ் நிலையத்தை அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்ட தலைநகராகி, அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள் அதிகரிப்பு என கள்ளக்குறிச்சி படு வேகமாக வளர்ச்சி பெற்றுவருகிறது.நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள பஸ் நிலையத்தால், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக தொடர்கிறது. சேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் ஆகிய சாலைகள் இணையும் நான்கு முனை சந்திப்பில் இந்த பஸ் ஸ்டேண்ட் உள்ளதுடன், இப்பகுதியிலேயே காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, வங்கிகள், தாலுகா அலுவலகம், கோர்ட், பதிவாளர் அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் உள்ளன.இதனால் நகரப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து பஸ் நிலையத்திலிருந்து வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது.இந்த பஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விரிவுபடுத்தப்பட்டன. ஒன்றரை ஏக்கருக்கும் மேலான இடவசதியுடன் கூடிய வகையில் பஸ் நிலையம் அகலப்படுத்தி சுற்று பகுதியில் கடைகள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு குறுகலான சாலைகளினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்த சாலை பகுதியை கடந்துதான் அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்ல முடிகிறது. ஆனால் மாவட்டத்தின் தலைநகராகியுள்ள இங்கு பெருகி வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்றவகையில் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலை வசதி போதுமானதாக இல்லாததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பஸ் டெப்போவிலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட டவுன் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.அத்துடன் தனியார் பஸ்கள் மற்றும் சேலம், கடலுார், திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, ஈரோடு, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட கோட்டத்திலிருந்து அரசு பஸ்கள் என தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் சாலை வசதியும், இட வசதியும் இல்லாததால், கள்ளக்குறிச்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலையமாக மாற்றிடவும், வெளியூர் செல்லும் பஸ்களுக்கென நகரின் வெளிப்பகுதியில் புதிய பஸ் நிலையத்தினை அமைத்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.