| ADDED : பிப் 11, 2024 09:54 PM
கச்சிராயபாளையம் : மாத்துார் அருகே நடந்த பைக் விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் கலைமணி,27; இவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், மணப்பெண் அழைப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்களை அனுப்பி விட்டு, அம்மாபேட்டையில் இருந்து பால்ராம்பட்டு நோக்கி கலைமணி பைக்கில் சென்றார்.எதிர்திசையில், கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் மணிகண்டன்,18; என்பவர் அவரது அக்கா சந்தியா என்பவருடன் கச்சிராயபாளையம் நோக்கி பைக்கில் சென்றார். மாத்துார் சுடுகாடு அருகே சென்றபோது, கலைமணி ஓட்டி வந்த பைக் எதிர்திசையில் மணிகண்டன் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் மணிகண்டன் மற்றும் சந்தியாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புது மாப்பிள்ளையான கலைமணி கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.