| ADDED : நவ 27, 2025 05:08 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலுார் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்த பனப்பாக்கத்தை ருத்திரமூர்த்தி, 57; டிரைவரான இவர், ஈச்சர் லாரியில் கோயம்புத்துாரில் இருந்து திண்டிவனத்திற்கு கல் அரைக்கும் இயந்திரம் ஏற்றிக் கொண்டு சென்றார். நேற்று காலை 5:30 மணிக்கு, சின்னசேலம் அடுத்த கனியாமூர் பிரிவு சாலை அருகே சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்துார் சேர்ந்த மணிகண்டன், 32; கோயம்புத்துாரில் இருந்து சென்னைக்கு லாரியில் மருத்துவ பொருள் ஏற்றிச் சென்றார். இவரது லாரி கனியாமூர் பிரிவு சாலை அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த ஈச்சர் லாரி மீது மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த லாரி கிளினர் தென்காசி மாவட்டம், ரத்தினபுரி சேர்ந்த தர்மலிங்கம் மகன் மகாதுரை, 24; காயமடைந்தார். உடன் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், சேலம் - சென்னை மார்கம் சென்ற வாகனங்களை மாற்றுபாதையில் அனுப்பி வைத்து போக்குவரத்தினை சீரமைத்தனர். இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.