உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்ணீர், உணவின்றி வன விலங்குகள் பரிதவிப்பு! வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா?

தண்ணீர், உணவின்றி வன விலங்குகள் பரிதவிப்பு! வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா?

கள்ளக்குறிச்சி : கடும் வறட்சியால் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகள் இறக்கும் அபாயம் துவங்கியுள்ளது. வனவிலங்குகளின் தண்ணீர், உணவு தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் காடுகள் உள்ளன. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் காப்புக் காடுகள் அழிக்கப்பட்டு வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. தற்போது குறைந்த பரப்பில் மட்டுமே காப்புக்காடுகள் உள்ளன.அடர்த்தியான காடுகள் குறைந்ததால் பாதுகாப்பு இன்றி பல விலங்குகள் அழிந்து விட்டன. இருப்பினும் தற்போது காப்பு காடுகளில் மான், நரி, மயில், முயல்கள், முள்ளம்பன்றி, காட்டெருமை, காட்டுப்பன்றிகள், குரங்குகள் வசிக்கின்றன. குறைந்த பரப்பளவில் கிடைத்த உணவு, தண்ணீர் கோடைக்காலத்தில் கிடைக்காமல் வனவிலங்குகள் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளிகளுக்கு உணவு தேடி செல்வது ஆண்டுதோறும் தொடர்கிறது. அத்தருணங்களில் சமூக விரோத கும்பலால் வேட்டையாடப்பட்டும், மின் வேலியில் சிக்கியும், வேட்டை நாய்களிடம் சிக்கியும், கிணற்றில் விழுந்தும் மான் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் பரிதாபம் ஏற்படுகிறது. இக்காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகின்றன. கோடை காலங்களில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கும் பொருட்டு வனப்பகுதிக்குள் பல இடங்களில் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன. இவைகள் வனத்துறை அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பின்றி உள்ளது.தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவும் சூழ்நிலையில் புற்கள் காய்ந்து, நீர்நிலைகள் முற்றிலும் வறண்டன. இதனால் இரவு நேரங்களில் வன விலங்குகள் தண்ணீர், உணவு தேடி வயல்வெளி மற்றும் மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் வருவது அதிகரித்துள்ளது. தண்ணீர் தேடி வரும் மான்கள் பாசன கிணற்றில் விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. வனவிலங்குகள் வயல்வெளிக்கு வருவதை முன்கூட்டியே தடுக்க வனப்பகுதியில் போதிய உணவு, தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர வனத்துறையினர் முயற்சி எடுக்கவில்லை. வனவிலங்குகளை பாதுகாக்கும் திட்டத்திற்காக அரசு பல கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தாலும், அவைகள் நடைமுறைக்கு வராமல் முடங்கி கிடப்பதால் வன விலங்குகளின் உயிரிழப்பு தொடர்கதையாக உள்ளது. வனவிலங்குகளின் தண்ணீர், உணவு தேவையை பூர்த்தி செய்து காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை