உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

 பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் முறையான பராமரிப்பு இல்லாததால் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளது. இதனால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை விரைந்து கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. மாவட்ட தலைநகரமாக விளங்கும் இங்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். நகர பகுதியில் காவல்துறை சார்பில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு, பஸ் நிலையம், நான்கு முனை சந்திப்பு, மார்க்கெட் பகுதி, மணிகூண்டு, அரசு மருத்துவமனை, நகரின் நுழைவு வாயில்கள், நான்கு முக்கிய சாலைகள் என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், சூரிய ஒளி மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கேமராக்களையும், கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இயங்கி வருகிறது. குற்றங்களைத் தடுப்பதிலும், கண்டறிவதிலும் முக்கிய பங்காற்றி வரும் இந்த கேமராக்களில், முறையான பராமரிப்பு இன்மையால் பெரும்பாலானவை பழுதடைந்துள்ளன. 110 கேமராக்களில் 25க்கும் குறைவான கேமராக்கள் மட்டுமே செயல்பட்டில் உள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில், 'மானிட்டரிங் ஸ்கிரீனில்' குறிப்பிட்ட சில இடங்களை தவிர மற்ற பகுதிகள், சிக்னல் இல்லாமல் வெறுமையாகவே உள்ளன. போலீசாரின் மூன்றாவது கண்ணாக விளங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகினால், அவற்றை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ள பகுதிகளில், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை விரைவாக கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கடந்த சில நாட்களாக பைக் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. ஆனால் திருட்டு ஆசாமிகளை கண்டறிந்து பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, பழுதான கேமராக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை