திருக்கோவிலுார்:இட நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் திருக்கோவிலுார் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலுாரில், புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.இதனை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், பஸ் நிலையம் அருகில் இருந்த பேரூராட்சி அலுவலகம், பேரூராட்சிக்கு சொந்தமான உணவகம், திருமண கூடம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தற்காலிகமாக விரிவுபடுத்தப்பட்டது.இருப்பினும், பயணிகள் அமர நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த இடமில்லாத காரணத்தால், பஸ் நிலையம் அருகாமையில் இருந்த 40க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.ஆனால், கடைக்காரர்கள் கோர்ட்டுக்கு சென்றதால் கடைகள் அகற்றம் நிறுத்தப்பட்டது. பஸ் நிலையத்தை பேரூராட்சி நிர்வாகம் குறுகிய இடத்தில் கட்டி முடித்து திறந்தது.தற்போது திருக்கோவிலுாரில் இருந்து நேரடியாக சென்னை, வேலுார், திருப்பதி, பெங்களூரு, மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி என ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.அத்துடன் அருகாமையில் இருக்கும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் கிராம பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினமும் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், பஸ் டிரைவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதன் காரணமாகவே, பல நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையதிற்குள் வராமல் வெளியில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் செல்லும் நிலை உள்ளது.பஸ்கள், பஸ் நிலைத்திற்குள் வந்து செல்வதில் சிரமம் ஒரு பக்கம் இருந்தாலும், பயணிகள் காத்திருந்து ஏறுவதற்கு நிழற்குடை, அமர்வதற்கான இடம் என எதுவும் இல்லை. இதனால் பயணிகள் பல மணி நேரம் நின்று பஸ் பிடித்துச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.பஸ் நிலையத்தில் நகராட்சியால் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கடைகளுக்கு முன்பாக பயணிகள் நிற்க இடம் இருந்தாலும், அந்த இடத்தையும் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.இந்த சிக்கலைப் போக்க புதிய பஸ் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.இதற்கு தற்போது உள்ள பஸ் நிலையம் எதிரே பம்ப் ஹவுஸ் அருகே ஏற்கனவே பஸ் நிலையம் அமைப்பதற்காக தனி நபரால் வழங்கப்பட்ட இடத்தில் விரிவடைந்த புதிய பஸ் நிலையத்தை ஏற்படுத்த நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் புதிய பஸ் நிலையத்திற்கான உத்தேச இடத்திலிருந்து, புறவழிச் சாலை அருகாமையில் தான் உள்ளது. எனவே அதனையும் புதிய பஸ் நிலையத்திற்கான இடத்துடன் இணைப்பதற்கான சாலை வசதியை நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்துவதன் மூலம் நகர மக்களின் கோரிக்கை நிறைவேறும்.நகராட்சியாக தரம் உயர்ந்துள்ள நிலையில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், விரிவுபடுத்தப்பட்ட புதிய பஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.