செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை என, 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை, கடந்த 28ம் தேதி நடந்தது. அதில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட 32 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இதில், தி.மு.க., - அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கும், பதிவுபெற்ற 11 அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 18 என, 32 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், ஜெயகுமார் என்பவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இத்தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இவற்றில், ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 1,427 பேர், இதர வாக்காளர்கள் 429 பேர் என, மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 பேர் ஓட்டளிக்க உள்ளனர் என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தெரிவித்தார்.