| ADDED : மே 09, 2024 12:20 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 280 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழை காலத்தில், இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, அப்பகுதியில் உள்ள 450 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.இந்த ஏரிக்கான மதகுகளை திறந்து செயல்படுத்தவும், ஏரி கலங்கல் பகுதிக்கு சென்று வரவும் ஏரிக்கரை மீதான வழியை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மாட்டுவண்டி, டில்லர் இயந்திரம், டிராக்டர் போன்ற வாகனங்களை விவசாயிகள் ஏரிக்கரை வழியாக இயக்குகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் சாலவாக்கம் ஏரிக்கரை மீது மண் மற்றும் ஜல்லிக்கற்கள் கொட்டி பாதை சமப்படுத்தும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.எனினும், ஏரிக்கரை மீது கரடு முரடான கற்கள் பதிந்துள்ளதால் ஏரிக்கரை வழியாக விவசாயிகள் சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, சாலவாக்கம் ஏரிக்கரை மீது தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.