| ADDED : ஜூன் 11, 2024 03:49 AM
சென்னை, : சென்னை விமான நிலையத்திலிருந்து மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ பயணியர் விமானம், நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, 176 பயணியருடன் புறப்பட தயாராக இருந்தது.விமானத்தில் ஏறியோர் பாதுகாப்புக்காக சீட்பெல்ட் அணிந்திருப்பதை விமான பணிபெண்கள் ஆய்வு செய்தனர். அப்போது பயணியர் ஒருவர் கையில் சிகரெட்டுடன் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.'எந்த விமானத்திலும் புகைப்பிடிக்க அனுமதி இல்லை. புகைப்பிடிக்கக் கூடாது' என, அவரிடம் பணிபெண்கள் எடுத்து கூறினர். ஆனால், சிகரெட் புகைப்பதை பயணி தொடர்ந்தார். சக பயணியர் எடுத்துக்கூறியும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.இதையடுத்து தலைமை விமானியிடம் பணிபெண்கள் புகார் தெரிவித்தனர்.விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகைப்பிடித்த பயணியர் மற்றும் அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம், 30 என்பதும், வேலைக்காக மலேஷியா செல்ல இருந்ததும் தெரியவந்தது. பின் அவரது பயணத்தை ரத்து செய்தனர். இப்பிரச்னையால், விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.