| ADDED : ஜூலை 22, 2024 03:38 AM
சென்னை : சதுரங்க ஆட்டத்தில், 'பிடே' விதிப்படி, ஒரு வீரர், சர்வதேச மாஸ்டர் எனும் தகுதியைப் பெற, 2,400 புள்ளிகளுடன், குறைந்தது மூன்று சர்வதேச மாஸ்டர்கள் அல்லது கிராண்ட் மாஸ்டர்களுடன் மோத வேண்டும்.தமிழகத்தில் திறமைமிக்க செஸ் வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனாலும், ஒரு சிலரைத் தவிர, மற்ற வீரர்களால் சர்வதேச மாஸ்டர் நிலைக்கு செல்ல முடியவில்லை. இடைநிலையிலேயே இவர்கள் உள்ளனர்.இந்த பின்னடைவை சரி செய்யும் நோக்குடன், தமிழக வீரர்களுக்கு வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்களுடன் விளையாடும் வாய்ப்பை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் உருவாக்கி உள்ளது.அதன்படி, தமிழ்நாடு ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று துவங்கியது.இதில், ஐந்து வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் என, மொத்தம் 10 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் தமிழக வீரர்கள் மோதுகின்றனர்.'ரவுண்ட் ராபின்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. கீழ்ப்பாக்கத்தில் நேற்று மாலை துவங்கிய இப்போட்டிகள், ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து கட்டங்களாக சென்னையிலும், தொடர்ந்து மற்ற போட்டிகள் கோவையிலும் நடத்தப்படுகின்றன.இவ்விழாவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.