உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பணை சீரமைப்பு பணி 3 ஆண்டுகளாக மந்தம் தண்ணீர் சேமிக்க முடியாத அவல நிலை

தடுப்பணை சீரமைப்பு பணி 3 ஆண்டுகளாக மந்தம் தண்ணீர் சேமிக்க முடியாத அவல நிலை

காஞ்சிபுரம்:பாலாறு தடுப்பணை சீரமைக்கும் பணி மூன்று ஆண்டுகளாகியும் துவக்கவில்லை என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. இது, மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உருவாக்கும் என, விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கர்நாடகா மாநிலம், நந்திமலையில் துவங்கும் பாலாறு, ஆந்திரா, தமிழகம் வழியாக, 348 கி.மீ., துாரம் கடந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், 222 கி.மீ., துாரம் திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய, ஐந்து மாவட்டங்களை கடந்து, பல டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

விவசாயிகள் கோரிக்கை

கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தர வேண்டும் என, பல்வேறு மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர்-வள்ளிபுரம், வாயலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் ஆகிய மூன்று இடங்களில் பாலாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.இதில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பழையசீவரம் பகுதியில், 42 கோடி ரூபாய் செலவில், 2020ம் ஆண்டு பாலாறு தடுப்பணை கட்டப்பட்டது.இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால், பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார்உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும்.இந்த தடுப்பணை மணல் அகற்றுவது மற்றும் தண்ணீர் கொட்டுமிடத்தில், ஜல்லிக்கற்களை சரி செய்வது என, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரமைப்பு பணிகளை நீர்வள ஆதாரத்துறையினர் செய்ய வேண்டும்.மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றும், தடுப்பணையில் இருந்து மணல் துார் வாரவில்லை. மேலும், தடுப்பணையில் இருந்து, தண்ணீர் கொட்டுமிடத்தில், கருங்கற்களை சரி செய்யவில்லை என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுப்பணையில் தேங்கி இருக்கும் மணலை அகற்றவும், தண்ணீர் கொட்டுமிடத்தில் கருங்கற்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

துார்ந்துபோன கால்வாய்

இதுகுறித்து, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது: பாலாற்றில் வெள்ளம் வந்தால், ஆற்றை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் பிரதான ஏரிகளில் தண்ணீர் நிரம்பும். இந்த ஏரிநீரை விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இதுபோன்ற கால்வாய்கள் துார்ந்து கிடக்கின்றன. இதுதவிர, பாலாறு குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை வழியாக செல்லும் தண்ணீர், ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.தடுப்பணையில் தேங்கி இருக்கும் மண் மற்றும் கற்களை முறையாக அடுக்காததால், போக்கு கால்வாய் தண்ணீர் செல்வது தடைபடும் அபாயம் உள்ளது. இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

தேங்கிய மணலைஅகற்றுவரா?

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் துவங்கும் செய்யாறு, பல்வேறு பகுதிகளின் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் பாலாற்றில் கலக்கிறது. செய்யாற்றில், அனுமந்தண்டலம், வெங்கச்சேரி ஆகிய இரு இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. கூடுதலாக, உத்திரமேரூர் ஒன்றியம், சிலாம்பாக்கம் பகுதியில், 35 கோடி ரூபாய் செலவில், 2018ம் ஆண்டு புதிய தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. தடுப்பணையில் தேங்கிய மணலை அகற்றாததால், தடுப்பணை சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிலாம்பாக்கம் தடுப்பணை உடைப்பு ஏற்படுவதற்கு முன், தடுப்பணையில் தேங்கி இருக்கும் மணலை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ