காஞ்சிபுரம் : மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று காலை 10:00 மணிக்கு காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலரும்பங்கேற்றனர்.இதில், வேலைவாய்ப்பு, பட்டா, ரேஷன் அட்டை, உதவித்தொகை என, 548 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.பரந்துார் தலைவர் பல ராமன் மனு: பரந்துார் ஊராட்சி செயலர் தனஞ்செழியன், ஊராட்சி நிர்வாகத்துடன் இணக்கமாக பணியாற்றவில்லை.வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபடாமல், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் உள்ளார். கிராம கணக்குகள் பராமரிப்பதில் அலட்சியம் காட்டும் இவர், நிர்வாகம் பற்றி என்னிடமும் எந்த தகவலும் கூறுவதில்லை. எனவே, ஊராட்சி செயலரை மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பை அகற்ற 7வது முறையாக மனு: ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, பிச்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள பட்டுமுடையார் குப்பம் கிராமத்தில், என்னுடைய விவசாய நிலம் உள்ளது. என்னுடைய நிலத்துக்கு செல்லும் வழியில் உள்ள அரசு நிலத்தில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகள் பூச்செடிகளை வைத்து, ஆக்கிரமித்துள்ளனர். இதனால், என்னுடைய நிலத்திற்கு செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற 7 முறை மனு அளித்துள்ளேன். விவசாயம் செய்ய முடியாமல் சிரமமாக உள்ளது. வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நுகர்பொருள் வாணிப கழக அரவை முகவர்கள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்த நெல்,எங்களுடைய ரைஸ் மில்லில் அரவை செய்து வழங்கும் பணியை செய்கிறோம். எங்களின் ரைஸ் மில்லின் மூலம், மாதந்தோறும் 2 கோடியே 35 லட்சம் கிலோ அரவை செய்ய முடியும். ஆனால், 1 கோடி கிலோ நெல் மட்டுமே எங்களுக்கு வழங்கி, மீதமுள்ள நெல் மூட்டைகளை, பிற மாவட்டங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி விட்டனர். இதனால், மாதந்தோறும் 15 நாட்கள் வேலையின்றி உள்ளோம். ஆலை நடத்த சிரமமாக உள்ளது. 2 கோடியே 35 லட்சம் கிலோ திறன் உள்ள ஆலைகள் உள்ள நிலையில், அதற்கான நெல் மூட்டைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.