| ADDED : மே 28, 2024 04:15 AM
வாலாஜாபாத், : வாலாஜாபாத் பேரூராட்சி, 15 வார்டுகளில் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் 70 பேர் பணியாற்றுகின்றனர். வீடு வீடாக சென்று மட்கும் குப்பை, மட்காத குப்பை சேகரித்தல், சாலைகள் மற்றும் பொது இடங்களில் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்கின்றனர்.இப்பணியாளர்களுக்கு, வாலாஜாபாத் புனித அ.சி.சி., பிரான்சிஸ் ஆலயம் சார்பில், தொழிலாளர் தினத்தையொட்டி கவுரவிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பாஸ்டர் சகாயராஜ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், முகமது இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கேற்று, துப்பரவு பணியாளர்கள் மேற்கொள்ளும் பெருந்தன்மையான பணிகள் குறித்து பாராட்டி பேசினர்.அதை தொடர்ந்து அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் நூலாடை போர்த்தி, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு விருந்தளிக்கப்பட்டது.