| ADDED : ஜூன் 25, 2024 11:38 PM
காஞ்சிபுரம்,உத்திரமேரூர் ஒன்றியம், மேல்துாளி கிராமத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தில், கிராமத்தினர் குடிநீர் பிடித்து செல்கின்றனர்.இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பாதையை மறித்து, தனியார் கம்பெனிக்கு ஆட்களை அழைத்து செல்லும் பேருந்து ஒன்று நிறுத்தப்படுகிறது.பகல் முழுதும் ஒரே இடத்தில் நிற்கும் தனியார் கம்பெனி பேருந்தால், தண்ணீர் பிடித்து வர கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.இத்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது, பயணியர் பேருந்தில் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர்.மேலும், அப்பகுதி மும்முனை சாலை சந்திப்பாகவும், சாலை வளைவு பகுதியாகவும் உள்ளதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது என, கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் பிடிக்க செல்லும் கிராமத்தினருக்கும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும், நிறுத்தப்படும் தனியார் கம்பெனி பேருந்தை கிராமத்தினருக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல்துாளி கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.