சென்னை : திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், முகப்பேர் சி.சி., அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் நடக்கிறது.இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளப் மற்றும் அகாடமி அணிகள் பங்கேற்றுள்ளன. மூன்றாவது டிவிஷன் போட்டியில், முகப்பேர் சி.சி., மற்றும் எபினேசர் சி.ஏ., அணிகள் மோதின.முதலில் பேட் செய்த, முகப்பேர் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 30வது ஓவரில் தனது கடைசி விக்கெட்டை இழந்து, 207 ரன்களை அடித்தது.அடுத்து களமிறங்கிய எபினேசர் சி.ஏ., அணி, 24.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 121 ரன்களில் ஆட்டமிழந்தது. முகப்பேர் சி.சி., வீரர் சந்திரசேகர், ஐந்து விக்கெட் எடுத்து, 19 ரன்களை கொடுத்தார். இதனால், 86 ரன்கள் வித்தியாசத்தில், முகப்பேர் சி.சி., அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ஸ்ரீ வைஷ்ணவி சி.சி., அணி, 29.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 129 ரன்கள் அடித்தது. எதிர் அணியின் வீரர் பிரணவ் பாலாஜி, ஐந்து விக்கெட் எடுத்து, 47 ரன்களை கொடுத்தார்,அடுத்து களமிறங்கிய எதிர் அணியான சுந்தர் சி.சி., அணி, 26.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் மட்டும் இழந்து, 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.