| ADDED : மே 29, 2024 06:28 AM
சென்னை, : அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான வலுத்துாக்கும் போட்டியில், ஜேப்பியார் மாணவன் தங்கம் வென்று அசத்தினார்.தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான வலுத்துாக்கும் போட்டி, வண்டலுாரில் உள்ள அப்பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டன. இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, பல்வேறு பல்கலையைச் சேர்ந்த 509 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், 59 கிலோ எடை முதல், 120 பிளஸ் வரை தனித்தனியாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் ஸ்குவாட், பெஞ்ச் பிரிஸ் மற்றும் டெட் லிப்ட் ஆகிய மூன்று போட்டிகள் நடந்தன. இதில், 120 பிளஸ் எடை பிரிவில், செம்மஞ்சேரி ஜேப்பியார் பல்கலை சார்பில், விக்னேஷ் மகேஷ்பாபு என்ற மாணவன் பங்கேற்றார்.இவர், ஸ்குவாட் 392.5 கிலோ, பெஞ்ச் பிரிஸ் 225 கிலோ மற்றும் டெட் லிப்ட் 270 கிலோ எடை என, மொத்தம் 887.5 கிலோ எடை துாக்கி, முதலிடத்தை பிடித்து அசத்தினார். போட்டியில் வெற்றி பெற்று, தங்கம் வென்ற மாணவனை பல்கலை நிர்வாகம் பாராட்டியது.