உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி ரூ.25 கோடியில் ஏப்.,குள் முடிக்க இலக்கு

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி ரூ.25 கோடியில் ஏப்.,குள் முடிக்க இலக்கு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், ஐந்து பிரகாரங்கள் உள்ளன. பல்லவர், சோழர், விஜயநகர அரசர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்து ஏகாம்பரநாதரை வழிபட்டுள்ளனர். ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தையொட்டி இரண்டாவது புற மதிற்சுவரில் கட்டப்பட்டிருக்கும் கோபுரத்திற்கு பல்லவர் கோபுரம் என்று பெயர். இது பல்லவர்கள் ஏகாம்பரநாதர் கோவிலை கருங்கற்களால் புதுப்பித்து கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாகும்.விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509ம் ஆண்டு ராஜகோபுரமும், மதிற்சுவரும், ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டினார் என, கோவில் ஸ்தல வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் கடைசியாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டு கடந்த நிலையில், கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது,ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிக்காக கோபுரத்தை சுற்றிலும் சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் கூறியதாவது:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் திருப்பணிக்காக, தமிழக அரசு 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆணையர் பொது நல நிதி 4 கோடி, திருக்கோவில் நிதி 4.5 கோடி என, மொத்தம், 25.5 கோடி ரூபாயில் 20 திருப்பணிகளும் மற்றும் அலுவலகம், அன்னதானகூடம், குளியல் அறை கழிப்பறை கட்டுமானப் பணி நடைபெற உள்ளது.திருப்பணியையொட்டி முதல் பாலாலயம், 2023ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் தேதி நடந்தது. இரண்டாவது பாலாலயம் கடந்த பிப்., 11ம் தேதி நடந்தது.திருப்பணிகளில், கம்பாநதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் நடந்து வருகிறது. மேலும், 9 பணிகள் நடைபெற உள்ளது.வெளிப்பிரகார திருப்பணிகள் முடிந்தபின், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் எந்தவித இடையூறு இல்லாமல் உட்பிரகார திருப்பணி துவக்கப்படும். அடுத்தாண்டு, ஏப்., மாதத்திற்குள் அனைத்து திருப்பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருப்பணி விபரம்

1காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தெற்கு ராஜகோபுரம் பழுது பார்த்து புதுப்பித்தல், முதல் மற்றும் இரண்டாவது பிரகாரம், ரிஷிகோபுரம் மேல்தளம் பழுதுபார்த்தல், நடராஜர் சன்னிதி பழுது பார்த்தல், பவுர்ணமி மண்டபம் பழமை மாறாமல் திரும்ப கட்டும் பணி, மூன்றாம் பிரகாரம் கருங்கல் தரை தளம் அமைத்தல், மூன்றாவது மற்றும் நான்காம் பிரகாரம், மதில்சுவர் பழுது பார்த்தல்.2 சிவகங்கை தீர்த்த குளத்திற்கு கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் அமைத்தல், கம்பா நதி தீர்த்தகுளம் பழுது பார்த்தல், ஆயிரங்கால் மண்டபம் உட்புறம், மேல்தளம் பழுது பார்த்தல், பல்லவ கோபுரம், மேற்கு ராஜகோபுரம், இரட்டை திருமாளிகை, முதல் பிரகாரம் பழுது, இரண்டாம் பிரகாரம், மாவடி சன்னிதி, சிவகாமி சன்னிதி பழுது பார்த்தல்.3தவன உற்சவ மண்டபம் பழமை மாறாமல் திரும்ப கட்டுதல், சிவகங்கை தீர்த்த மண்டபம் சுற்று மண்டபம், ரிஷி கோபுரம் மற்றும் மண்டபம் பழுது பார்த்தல் மற்றும் பிற பணிகளாக அன்னதானம், அலுவலக கட்டடம், கழிப்பறை, குளியல் அறை கட்டுமானப் பணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை