காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே. சீருடையில் இருந்த பெண் காவலரை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 38. கம்ப்யூட்டர் மெக்கானிக். இவரது மனைவி டில்லிராணி, 33, இவர், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஏழு வயதில் மகளும், மூன்று வயதில் மகனும் உள்ளனர்.மேகநாதன் என்பவருக்கும், டில்லிராணிக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று, மதியம் 2:30 மணி அளவில், சாலை தெருவில் இருக்கும், அரசுடமை வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுத்துவிட்டு வெளியே வரும் போது, காவலர் சீருடையில் இருந்த டில்லிராணியை, மேகநாதன் வழி மறித்து, கை மற்றும் கால் ஆகிய பகுதிகளில், கத்தியால் வெட்டி உள்ளார்.ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், தீவிர சிகிச்சைக்கு, டில்லிராணி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து, சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேகநாதனை தேடி வருகின்றனர்.