உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொன்னேரிக்கரையில் புது காவல் நிலையம் திறப்பு...விடிவு! : 58 கிராமங்களில் குற்றவாளிகளை கண்காணிப்பது எளிது

பொன்னேரிக்கரையில் புது காவல் நிலையம் திறப்பு...விடிவு! : 58 கிராமங்களில் குற்றவாளிகளை கண்காணிப்பது எளிது

காஞ்சிபுரம்:காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில், புகார் அளிக்கவும், விசாரணைக்கு ஆஜராகவும், 15 கி.மீ., துாரத்துக்கும் மேலாக பயணிக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், பொன்னேரிக்கரையில் புதிதாக காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. இதனால், 58 கிராமத்தினர் நீண்ட துாரம் பயணிப்பது குறைவதோடு, குற்ற சம்பவங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் என இரு காவல் கோட்டங்களின் கீழ், இரு மகளிர் காவல் நிலையங்கள் உட்பட, 14 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.மேலும், சைபர் கிரைம், மதுவிலக்கு அமல் பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எல்லை பரப்பு அதிகமுடைய காவல் நிலையமாக காஞ்சி தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையம், பல ஆண்டுகளாகவே, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்தது.நான்கு ஆண்டுகளுக்கு முன், நத்தப்பேட்டை அருகே புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது.நத்தப்பேட்டை அருகே காவல் நிலையம் அமைக்கப்பட்டதால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோர் புகார் அளிக்கவோ, விசாரணைக்கு ஆஜராகவோ, இரண்டு பேருந்து பிடித்து வர வேண்டிய நிலை இருந்தது.உதாரணமாக படுநெல்லி, புரிசை, புள்ளளூர் போன்ற கிராம மக்கள் மிகுந்த 15 கி.மீ., துாரத்துக்கு மேல் பயணித்து சிரமத்திற்கு ஆளாகினர்.தாலுகா காவல் நிலைய எல்லையில், 66 முதன்மை கிராமங்களும், 23 குக்கிராமங்களும் இருந்தன. மாநராட்சியில் சில வார்டுகள் கொண்டு பெரிய எல்லையாக இருப்பதால், இரவு நேர ரோந்து பணிகள் மேற்கொள்வதிலும் போலீசாருக்கு சிரமம் இருந்தது.இதனால், தாலுகா காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, பொன்னேரிக்கரை காவல் நிலையம் உருவாக்க அரசுக்கு, காவல் துறை உயரதிகாரிகள் கருத்துரு அனுப்பினர்.அதன்படி, 2023ல், முதல்வர் ஸ்டாலின், பொன்னேரிக்கரை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.அதையடுத்து, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியின் வளாகத்தில், கல்லுாரியின் கட்டடம் ஒன்றில், தற்காலிகமாக பி.7 பொன்னேரிக்கரை காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.மாவட்ட எஸ்.பி., சண்முகம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மார்ட்டின் ராபர்ட்ஸ், சார்லஸ் சாம் ராஜதுரை, பாலகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், போலீசார் பங்கேற்றனர்.எஸ்.பி., சண்முகம் அறிவுறுத்தலின்படி, தலைமை காவலர்கள் ரமேஷ் மற்றும் உஷா ஆகிய இருவரும் ரிப்பன் கட்டி, காவல் நிலையத்தை திறந்தனர்.பொன்னேரிக்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளராக, நிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு, ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், 27 போலீசார் பணியாற்ற உள்ளனர்.இது குறித்து, மாவட்ட எஸ்.பி.,சண்முகம் கூறியதாவது:அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தற்காலிகமாக பொன்னேரிக்கரை காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.பொன்னேரிக்கரை சந்திப்பில், மேம்பாலம் அருகிலேயே நிரந்தர காவல் நிலையம் கட்ட இடம் பார்த்துள்ளோம். கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பி, இந்தாண்டே காவல் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், காஞ்சிபுரம் நகருக்கு வந்து, அங்கிருந்து ஆட்டோ, பேருந்து பிடித்து தாலுகா காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்தது.பொன்னேரிக்கரை காவல் நிலையம் திறக்கப்பட்டதால், கிராமத்தினர் புகார் அளிக்க எளிதாக இருக்கும்.எதிர்காலத்தில், மெட்ரோ, பரந்துார் ஏர்போர்ட் போன்ற பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் இப்பகுதியில் வர இருப்பதால், இந்த காவல் நிலையத்தின் அவசியம் முக்கியத்துவம் வாய்ந்தது.தாலுகா காவல் நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கரை காவல் நிலையம் பிரிக்கப்பட்டதால், தாலுகா காவல் நிலைய போலீசார், மாகரல், ஓரிக்கை, செவிலிமேடு போன்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவர்.சுற்றியுள்ள கிராமப்புறங்களில், இரவு நேர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். குற்ற சம்பவங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

89ல் இருந்து 58 கிராமங்கள் பிரிப்பு!

காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லையில், 66 முதன்மை கிராமங்களும், 23 துணை கிராமங்களும் என, 89 கிராமங்கள் கொண்ட பெரிய எல்லையாக இருந்தது. இதிலிருந்து, புரிசை, பள்ளம்பாக்கம், போந்தவாக்கம், படுநெல்லி உள்ளிட்ட, 39 முதன்மை கிராமங்களும், 19 துணை கிராமங்கள் என, 58 கிராமங்கள், பொன்னேரிக்கரை காவல் நிலையில் சேர்க்கப்பட்டு உள்ளன. புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலையத்தை பொதுமக்கள், 94981 06809 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி