காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள், துாப்புல் வேதாந்த தேசிகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, காலை 5:30 மணிக்கு நடந்தது. கும்பாபிஷேக நாளில், மாலை சுவாமி புறப்பாட்டின்போது, பிரபந்தம் பாடுவது சம்பந்தமாக தென்கலை பிரிவினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில், கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, வடகலை, தென்கலை பிரிவினரில் யார் முதலில் பிரபந்தம் பாட வேண்டும் என்பதை, சீட்டு எழுதி, அதை 12 வயது சிறுமி, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.அதன்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் பூவழகி, வடகலை, தென்கலை பிரிவு முக்கியஸ்தர்கள், போலீசார் முன்னிலையில் நேற்று காலை சீட்டு எழுதி குலுக்கல் நடந்தது.இதில், 12 வயது சிறுமி ஒருவர், இரு சீட்டில் ஒன்றை தேர்வு செய்தார். அந்த சீட்டில் வடகலை பிரிவு பெயர் இருந்ததால், முதலில் பிரபந்தம் பாட, வடகலை பிரிவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுவாமி வீதியுலா விமரிசையாக நடந்தது. வடகலை பிரிவினர் பாடியதை தொடர்ந்து, தென்கலை பிரிவினரும் பிரபந்தம் பாடினர்.