காஞ்சிபுரம்:இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வி.ஐ., உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த இந்நிறுவனங்களின் சந்தாதாரர்கள், அதிலிருந்து விலகி, ரீசார்ஜ் கட்டணம் குறைவாக உள்ள பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு சந்தாதாரர்களாக மாறி வருவது அதிகரித்துள்ளது.அதன்படி, காஞ்சிபுரத்தில் தனியார் தொலைத் தொடர்பு சந்தாதாரர்களாக உள்ள பலர், தாங்கள் வைத்திருக்கும் அதே மொபைல் எண்ணை பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு எண்ணாக மாறுவதற்காக காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு நேற்று காலை ஆர்வத்துடன் வந்திருந்தனர்.அதேபோல, புதிதாக பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு வாங்குவதற்கும் பலர் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் குவிந்ததால், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்ட உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து புதிய சிம்கார்டு வழங்க திணறினர். இதனால், 20க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு வாங்க வந்த காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த கிருபானந்தம் கூறியதாவது:நான் பயன்படுத்தும் தனியார் நெட்வொர்க் நிறுவனத்தில், 379 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாட்கள் வேலிடிட்டியுடன், 2 ஜி.பி., டேட்டாவும், அன்மிலிடெட் கால்கள் பேச முடியும்.ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலே, 45 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜி.பி., டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்கள் பேசமுடியும். இதனால், குறைவான கட்டணமும், வேலிடிட்டி நாட்கள் அதிகம் உள்ள பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்புக்கு மாறியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.