ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் ராமானுஜர். இத்தகைய சிறப்பு மிக்க ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்பதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்சவ உற்சவம், ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் 10 நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா ஏப்., 29ம் தேதி நடந்தது.அதை தொடர்ந்து, ராமானுஜரின் 1,007வது அவதார உற்சவம், மே 3ம் தேதி துவங்கியது. தங்கப்பல்லக்கு, யாளி வாகனம், மங்களகிரி, சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், வெள்ளை சாத்துபடி குதிரை, திருமந்திரார்த்தம் சேஷ வாகனம், யானை வாகனங்களில் தினமும் எழுந்தருளி, வீதி உலா வந்து அருள்பாலித்தார்.விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜர் தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று, 'கோவிந்தா, கோவிந்தா' முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் செல்லும் பாதையில், பக்தர்கள் பாதம் வெப்பத்தால் சுடாமல் இருக்க, தண்ணீர் விடப்பட்டது.சாலை முழுதும் பெண்கள் கோலமிட்டு தேருக்கு வரவேற்பு அளித்தனர். ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்து, பக்தர்கள் பஜனை பாடி சென்றனர்.ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் பாஸ் தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள், பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு வீசிய தட்டு, டம்ளர் குளிர்பான பாட்டில் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அகற்றினர்.அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இடம்: ஸ்ரீபெரும்புதுார்.