| ADDED : மே 07, 2024 04:24 AM
ஸ்ரீபெரும்புதுார் : -ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ராமானுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ராமானுஜர் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்சவ உற்சவம், ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் 10 நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா ஏப்., 29ம் தேதி நடந்தது.அதை தொடர்ந்து, ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம், மே 3ம் தேதி துவங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று, சிம்ம வாகனத்தில் ராமானுஜர் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, மங்களகிரி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர் அதை தொடர்ந்து, மே 11ம் தேதி, ராமானுஜர் திருத்தேர் விழா நடக்க உள்ளது.