| ADDED : மே 25, 2024 10:05 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில், 60 சதவீதம் விவசாய நிலங்கள், ஏரி நீர் பாசனத்தை கொண்ட சாகுபடி நிலங்களாக உள்ளன. இந்த நிலங்களில் தற்போது நவரை பருவ சாகுபடிக்கான அறுவடை பணிகள் முடிந்துள்ளன.அதைத் தொடர்ந்து, சொர்ணவாரி சாகுபடி பணிகள் தற்போது தீவிரமடைந்த நிலையில், ஏரிகளில் போதுமான நீர் இருப்பு இல்லாத நிலை உள்ளது.குறிப்பிட்ட ஒரு சில ஏரிகளில் மட்டும் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அவ்வாறான ஏரி அருகே, நிலம் வைத்துள்ள விவசாயிகள் சிலர் சாகுபடி பணிகள் மேற்கொள்கின்றனர்.எனினும், போதுமான கோடை மழை பெய்யாதால், பெரும்பாலான விவசாயிகள் சொர்ணவாரி சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.இதுகுறித்து, மருதம் கிராம விவசாயிகள் கூறியதாவது:ஏரிநீரை நம்பி பயிரிட்டு இறுதி கட்ட பாசன நேரத்தில் கடைகோடி நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை எனில், பயிர்கள் கருகி வீணாகும் நிலை ஏற்படக்கூடும்.தற்போது வரை கோடை மழை கனமாக பெய்யாதால், சொர்ணவாரி பட்ட சாகுபடி பணிகளை துவக்குவதில் தாமதப்படுத்தி வருகிறோம்,இவ்வாறு அவர்கள் கூறினர்.