| ADDED : மே 13, 2024 12:50 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்குள்ள நீச்சல் விளையாட்டு குளத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம், கடந்த 2ம் தேதி துவங்கி, ஐந்து கட்டங்களாக நடக்கிறது. காலை 6:00 மணி முதல், 11:00 மணி வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், பெண்களுக்கு மட்டும், காலை 10:00 - 11:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு என, தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.சிறுவர் - சிறுமியருக்கு நீச்சல் பயிற்சி அளிக்க ஆண் பயிற்சியாளரும், உதவியாளர்களும் ஆண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல, பெண்களுக்கும் ஆண்களே நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.சிறுமியர் மட்டுமின்றி வளர்இளம் பெண்களுக்கும், ஆண் நீச்சல் பயிற்சியாளரே பயிற்சி அளிக்கிறார். இதனால், நீச்சல் கற்க ஆர்வம் இருந்தும், வளர்இளம் பெண்கள் கோடைகால நீச்சல் பயிற்சியில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றனர்.கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில், பெண்களுக்கு என, 10:00 - 11:00 மணி வரை பிரத்யேகமாக நேரம் ஒதுக்கும், விளையாட்டு துறையினர்,பெண் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.