திருமங்கலம்:நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 37. இவர், சென்னை அண்ணா நகர், 14வது தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.அதே வளாகத்தில், மனைவி நிர்மலாதேவி, 34, என்பவருடன் தங்கியுள்ளார்.சில நாட்களுக்கு முன், இந்த குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் நபருக்கு உணவு 'டெலிவரி' செய்ய, வாலிபர் ஒருவர் வந்துள்ளார்.அந்த வாலிபர், நிர்மலாதேவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.அவர் கொண்டுவர சென்ற போது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர், நிர்மலாதேவி கையில் இருந்த தங்க வளையல் மற்றும் மொபைல்போனை பறிக்க முயன்றுள்ளார்.சுதாரித்த நிர்மலா, வாலிபரை தள்ளிவிட்டு வெளியில் ஓடிவந்து சத்தமிட்ட போது, அங்கிருந்து அவர் தப்பினார்.இதுகுறித்து, திருமங்கலம் போலீசில் நிர்மலாதேவி புகார் அளித்தார். போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது அலிகான், 22, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.விசாரணையில், பட்ட படிப்பை முடித்த முகமது அலிகான், வேலை கிடைக்காததால் உணவு 'டெலிவரி' வேலை செய்து வந்தது தெரிந்தது.குடும்ப வறுமை காரணமாக நகை பறிப்பில் ஈடுபட்டதாக, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை, நேற்று சிறையில் அடைத்தனர்.